Thursday 25 April 2013

காதல் அஞ்சல் !

என்னவளே ! நல்லவளே !
என்ன எழுதுவேன்  என தெரியாமலே
எழுத துவங்கிவிட்டேன்
எப்படியும் எழுதியே ஆக வேண்டும்
எனும் ஒரு எழுச்சியில்  ...

ஏதோ ! எனக்கு தெரிந்த தமிழை
அரைகுறையாய்,குறை, நிறையாய்
அரை முகமாய்,மறைமுகமாய்
எதேதோ வார்த்தைகள் கொண்டு
வர்ணனை  என்னும் போலி
வர்ணம் பூசி வைத்து
உப்பில்லா உவமைகளை, பெரும்
ஒப்பிலா உவமைகளை போல்
ஒப்புக்கு உபயோகித்து வந்தால் ,
கிட்டத்தட்ட, ஒப்பிட முடியா 
கவிதையினை போல் எப்போதும்
புகழ்ந்துபேசி, வார்த்தைகளுக்கே
மன்றாடும் மக்கு கவிஞ்ஞனை
மன்ற கவிஞன் ஆக்கி விட்டனர்.

உன் நினைவால், கிறுக்கன்
நான் கிறுக்கும் கிறுக்கல்கள்
எல்லாம்  காதல் கவிதைகளாய் ...

காதல் கவிதையாய் கிறுக்கி தள்ளிய
எனக்கு,காதல் கடிதம் எழுதிட
கூடவில்லை காண்.

இருந்தும் கேட்டது நீ -என்பதால்
இதோ இந்த விஷ பரிட்சை.

காதல்
போலி கூத்தாய்,
கேலி கூத்தாய் பல கண்டும்
சில, கடந்தும் வந்தவன் நான்.

காதல்
வாழ்க்கை நாடகத்தின்
பெரும் பகுதி ,அரும் பகுதி
என காணாமலே, உணரவும்
புரியவும் வைத்த என்
காதல் தேவதை நீ ....

காதல் ஞானம் அற்றவன் நான்
தொலைதூர கல்வி வழி
காதல் கற்று கொடுத்த-என்
காதல் தலைமை ஆசிரியை நீ .....

'காதலுக்கு கண் இல்லை "
காதல் கிட்டாத,ஒட்டாத கபோதிகளின்
கபட கருத்து இது, என்றே கிடந்தேன் .

"உருவமே இல்லாத உன்னத உணர்வு காதல் "
அதற்க்கு எதற்க்கு கண்? என்று ,
அறியாமை கண் திறந்த
என் கண் காணா காதல் நீ ......

காதல்
எட்டிக்காயாய் ,எட்டாக்கனியாய் ,
கிட்டாக்கனியாய் உன் அறிமுகத்திற்கு
முன்பு

காதல்
கிட்டக்கனியாய்,கிட்டும்கனியாய்,
திகட்டாக்கனியாய் உன் அறிமுகத்திற்கு
பின்பு

திகட்டா சுவையை ,தித்திக்கும்
சுவையுடன்,இனிக்கும்
வகையினில் இனிக்க இனிக்க
புகட்டிய,பட்டுக்குட்டி நீ...

என்னென்னவோ என்னை செய்து
என்னை ஈர்த்து விட்ட ஆசையின்
ஆசை லேசாய் கூட
தீரா, ஆசை கிழ பட்டி நீ ..

என்னை உனக்கும் உன்னை எனக்கும்
பரஸ்ப்பரம் பிடித்து போனதற்கு
எதார்த்தமான முகாந்திரம் ஏதும் இல்லையே ?
அட முகமே முழுதாய் அறிமுகம் இல்லை
எனும் போது, முகாந்திரம் எப்படியும்
முக்காடிட்டு முகம் மறைத்து தான் இருக்கும்.

சரி முகம் தான் முழுதாய் முழு
முழுதாய் சரணாகதி என்றால் -மரபுகள்
கூட வெறும் மௌனம் தான் காக்கிறது
மௌனம் காக்கும் மரபுகளை கூட
என் முன் மண்டியிட வைக்கமுடியும்
உன்னையும் ,உன் மனதையும் மதிப்பதால்
மரபுகளையும் மதிக்கின்றேன்
மானசீகமாய்.....

பொறுமை என்பது  பொதுவாய் எனக்கு புதிதில்லை
உன் அறிமுகத்திற்கு பின்பு
பொறுமையில் பூமிக்கு போட்டியாய் நான் ....

நினைவு என்ற ஒன்று மட்டும் இல்லாமல் போனால்
நிஜத்தில் எத்தனை காதல்
இல்லாமலே போயிருக்கும் !
உன்னை நினைத்துகொண்டிருப்பதில்  தான்
எத்தனை எத்தனை இனிமை !

அப்பொழுதும் இப்பொழுதும், எப்பொழுதும்
முப்பொழுதும் உன்னை நினைப்பேன் !

நினைப்பேன் நினைப்பேன் என்கின்றனரே
அப்படி என்ன தான் நினைப்பார் ??
எனும் கேள்வி எண்ணத்தில்
சுனாமி அலையைபோல் சீறி எழுகிறதா ?

கனவுகளுக்குத்தான் கால நேரம் நிர்ணயம்
நினைவுகளுக்கு என்ன, நித்தம்
நித்தம் நினைக்கவேண்டியது தான் .

சித்திரை நிலவாய், நித்திரையில் நீ
முகத்திரையும் ,மற்ற திரைகளும் 
விலகி இருக்க,
அதைகண்டும் காணாது விட்டு விட்டு
முத்திரையாய் நித்திரை கொள்ளும்
உன் நிலைகளை மொத்தமாக முடியாவிட்டாலும்
ஏதோ கொஞ்சம்  கொஞ்சமாய்
நெஞ்சோரம் நினைத்துகொள்வேன்

உன் நினைவென்னும் நீச்சல் குளத்தினில்
நீங்காமல் நீந்திட  பழகியதால்
வாழ்க்கை கடலில் என்னால்
எதிர் நீச்சலே தடையில்லாமல்  இட முடிகின்றது .

எழுதிய களைப்பினில் ஏதோ நினைவில்
துவக்க வரிகளை படித்து பார்த்தேன் ..
தூக்கி வாரி போட்டது எனக்கு ...


என்ன எழுதுவதென தெரியாமல் துவங்கியவன்
கிட்டத்தட்ட 100   வரிகளையும் கடந்துவிட்டிருக்கின்றேன்

உன்னைபற்றி எழுத வேண்டும் என்றால்
இன்னும்எவ்வளவோ இருக்கின்றது... 
ஆனால், பதிப்பிட பக்கமும் பத்தாது
படிப்பவர்க்கு, பக்குவமும் பத்தாது என்பதால்
இப்போதைக்கு இந்த காதல் கடிதத்தின்
உரைக்கு, இனிமையான உன் நினைவோடு
திரை இடுகிறேன்

                                   என்றும் உன் காதலுடன் !
                                        ஆசை அஜீத்

No comments:

Post a Comment