Sunday 28 April 2013

உன்னில் எனை கவர்ந்தது யாது ?

உன்னில் எனை கவர்ந்தது யாது ?

ஈதறிய தோதானவர்
எனையன்றி வேறார் ?
ஆதலால், இதோ
நானே சிறப்பு நடுவராய் வீற்று
நின் சிறப்பம்சங்களை
தேர்ந்தெடுத்திட ஒன்றொன்றாய்
சீர்படுத்திடுகின்றேன்..

நேர்வகிடின் சற்றே கீழிறங்க
அண்ணாசாலையின் 
அரை ஏக்கர் போல
மதிப்பினில் பரந்த நெற்றியோ ?

காந்தத்தையும் , காதலையும்
கலவையாய் கொண்ட
கொள்ளை குளிர் கண்களோ ?

முகம் அதன் மொத்த
தேவதை அம்சங்களையும்
முந்தி, முதலழகாய்
முதலிடம் பிடிக்கும்
 உன் மொழு மொழு மூக்கோ ?

அகத்தின் அழகிற்கு முகமே பொறுப்பு
அது போல
உன் முகத்தின் அழகிற்கு
மூக்கே
முழு முதற் பொறுப்போ ??

கவ்வியே தூக்கிடும் கவின்மிகு
வாத்து போல எழிலினில் ஒத்த
கவ்விட முடியா ,குட்டை கழுத்தோ ??

சிறு வெடியாய் வெடித்து
சிதறிடும் குலுக் சிரிப்பின், சிறப்பை
கூடுதல் சிறப்பாக்கும் பொருட்டு 
முன்கூட்டியே வெளிப்படும்
மூச்சின் குழந்தைகளோ ?

தேக்கிலான தேகத்தின்
வாக்கிலான பாகங்களிலெல்லாம்
அம்சமான அம்சங்களுடன்
அம்சமாய் அமைந்திருக்க

கோக்குமாக்கான கற்பனைவளத்துடன்
பிரம்மனை எண்ணத்தூண்டும்
ஓர் அங்கமதன் அபரிவிதமோ ?


நடுநிலைக்கருதியே ஈங்கு
நடுவராய் நான்  அழைக்கப்பட்டது  ,
என  நினைக்கின்றேன் ?

அப்பப்பா ! அப்பப்பா !
போதும்,போதும்

மிரட்டும் அவள் அழகினில்,
மிரண்டு, மயங்கி  படுநிலைக்கு
தள்ளப்பட்டது தான் மீதம் ....

No comments:

Post a Comment